செவ்வாய், நவம்பர் 11, 2003

தைப்பொங்கல் தமிழரின் புத்தாண்டா?



படம் உதவி: (c) அரிசோனா பல்கலைக்கழகம்  

பொங்கல் விழாவில் கதிரவன் கதாநாயகன். பொங்கல் விழாவை இந்தியாவெங்கும் வேறு வேறு பெயரில் கொண்டாடுகிறோம். வான, சோதிட சாஸ்திரப்படி அதன் பொதுவான பெயர் 'மகர சங்கராந்தி'. அன்று கதிரவன் மகர ராசியில் பிரவேசிக்கிறான். அன்றிலிருந்து தன் தென்திசைப் பயணத்தை முடித்து வடதிசைப் பயணத்தை (உத்தராயணம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது) ஆரம்பிக்கிறான். பகலின் நீளம் அன்று தான் வருடத்திலேயே மிகக்குறைவு. ஆங்கிலத்தில் Winter Solstice என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து பகலின் நீளம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். உவ்வுலகில் எல்லா வளங்களுக்கும் கதிரவனே ஆதாரம். எனவே அவன் ஆளுமை உயருவது யாவருக்கும் நல்லது என்ற அடிப்படைதான், இந்த நாளை சுபநாளாகக் கொண்டாட முக்கியமான காரணம். இப்படியொரு நல்ல நாளை ஆண்டுத் துவக்கமாக ஒரு சமூகம் கொண்டிருக்க பெரும் வாய்ப்பு உண்டு.

இங்கும் இரண்டு பிணக்குகள்:

1. இன்றைய அறிவியல் அளிக்கும் வசதிகளைக் கொண்டு பார்க்கையில் உண்மையில் Winter Solstice டிசம்பர் 21-22 வாக்கில் தான் நடக்கிறது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நாம் கொண்டாடும் ஜனவரி 14க்கும் இதற்கும் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு மேல் இடைவெளி. எனவே நாம் இன்று கொண்டாடுவது ஒரு குறிப்புக்காகத் தான் (symbolic) என்று சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில் ஆண்டின் நீளத்தை நம் வான சாஸ்திரங்கள் துல்லியமாகக் கணிக்காததால் தான் இந்த இடைவெளி என்பது ஒரு கருத்து. 'நெடுங்காலத்துக்குமுன் நம் மகர சங்கராந்தி டிசம்பரில் தான் இருந்தது; ஒவ்வொரு வருடமும் சில நிமிடங்கள் பிழையானதால் இன்று கிட்டத்தட்ட 22 நாட்கள் தள்ளிப்போய்விட்டது' என்று கேள்விப்படுகிறேன். சும்மா ஒரு கணக்குக்கு 5000 வருடத்திற்கு முன் சரியாக இருந்ததாகக் கொண்டால், வருடத்திற்கு சுமார் 6 நிமிடம் பிழை என்றாலே போதும், இந்த வித்தியாசத்திற்கு! நம் முன்னோர் வானியலில் புலிகள் என்று சொல்லிக்கொள்ளுவது இங்கு கொஞ்சம் உதைத்தாலும் அவர்களிடம் இருந்த வசதிகளுக்கு, அவர்கள் செய்த கணிப்பு உன்னதமானதுதான். இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்குமா அல்லது இப்படியே இருக்குமா என்பது, இந்தப் பிழையை, பின்வந்த சோதிட, வான சாஸ்திர வல்லுனர்கள் சரிசெய்துவிட்டர்களா என்பதைப் பொறுத்து இருக்கிறது. எனக்குத்தெரியவில்லை.

2. பூமிப்பந்தின் வட பாகத்தில் இருப்பவர்களுக்கே இது நல்ல சகுனம். தென் புலத்தில் இருப்பவர்களுக்கு? அவர்களுக்கு இத்தனை நாள் இருந்து வந்த நீண்ட பகற்பொழுது இனி குறைய ஆரம்பிக்கிறது. அந்த விதத்தில் இது ஒரு துக்க நாள். சந்தோஷமான நாள் அல்ல! உண்மையில் குமரிக்கண்டம் இலங்கைக்கும் தெற்கே இருந்ததாக எடுத்துக்கொண்டால் அந்தக் கண்ட வாசிகளுக்கு இது முன்னேற்றத்தின் சின்னம் அல்ல. எனவே அவர்கள் இதை முன்னிறுத்தி தங்கள் புத்தாண்டாகக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. இது அவர்களுக்கு Summer Solstice! அப்படியானால் ஆஸ்திரேலியாவிலோ கேப்டவுனிலோ உள்ள தமிழர்களே நீங்கள் கதிரவன் உங்களை விட்டுப்போகும் துக்கநாளையா பொங்கலாகக் கொண்டாடுகிறீர்கள், பாவம்!

இன்னொன்றும் சொல்லலாம், பகல் பொழுது குறைவது நல்ல விஷயமா கெட்ட விஷயமா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நிலநடுக்கோட்டருகே உள்ளவர்களுக்கு உத்தராயணமும் தக்ஷிணாயணமும் பெரிதாய் ஒன்றும் மாற்றங்களைக் கொடுக்கப் போவதில்லை. நம் தமிழகம், இலங்கை போன்ற சில வெப்ப மண்டல வாசிகளுக்கு சுட்டெரிக்கும் நீண்ட கோடைப்பகற்பொழுதைவிட குளிர்ந்த வாடைப்பகல் பிடித்தமானதாய் இருக்கும். எனவே எது நல்ல நாள் எது துக்க நாள் என்றெல்லாம் வரையறுக்க முடியாது.

மேலும் விவரங்கள் வேண்டும் ஆர்வமுள்ள நண்பர்கள் சொடுக்கவேண்டிய சுட்டி:
http://scienceworld.wolfram.com/astronomy/WinterSolstice.html
 

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...