வியாழன், ஜனவரி 22, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14


சண்முகம், நான், அழகிரி - 2000-ல்

அழகிரி எனக்குக் கிடைத்த அருமையான தோழன். ஐடிஐ தொழிற்பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர். உலகு மூலம் அறிமுகமானாலும், என்னுடனேயே அதே வருடம் பி.ஈ. படித்ததால் நெருக்கமான நட்பு. நெல்லைச் சீமை சொந்த ஊர். பெரும்பாலும் கோவையிலேயே வேலை+வாழ்க்கை. அப்போது சாய்பாபா காலனியில் ஒரு மான்சனில் அறை. அழகேசன் சாலையில் ஒரு மெஸ்ஸில் சாப்பாடு. வெகுவிரைவில் ஒட்டிக் கொண்டோம். ஒருவர் இல்லாமல் இன்னொருவரைப் பார்க்க முடியாது என்னும் அளவுக்கு.

ஞாயிறுகளில் காலையில் அழகிரி அறையில் கூட்டுப்படிப்பு. மற்ற பாடங்களை விட, கணிதம் மட்டும் போட்டுப் பழகினால்தான் வரும். எஞ்சினீரிங் கல்வியில் பெரும்பாலும் பாடங்களில் கணக்கு அடிப்படையில் கேள்விகள் இருக்கும். எனவே அவற்றை செய்து பார்த்து எங்களைத் தீட்டிக்கொள்ள இந்தக் கூட்டுப் படிப்பு உதவியது. எங்கள் கூட்டுப்படிப்புக்கு கால அட்டவணை செய்து, தேவையான புத்தகங்கள், நோட்ஸ் எல்லாம் சேகரித்து, என்னையும் கறாராக வரவைத்து, 'படிக்க வைத்தது' அழகிரி. இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த நாட்கள் நிறைய. ஒரு மணி நேரம் படித்தால், அரை மணின் நேரம் பேக்கரி விசிட், அரசியல் அரட்டை, என்று பொழுது கழியும். அழகிரி அறையிலும் படிக்கும் போது ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும். அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட பார்வையும் இருவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்ததும் நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

இப்படி என்னைப் படிக்க வைத்ததில் அழகிரிக்கு ஒரு அஞ்சு மார்க் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்றால் எனக்கு ஒரு இருபது மார்க்காவது இந்தக் கூட்டுப்படிப்பினால் மட்டுமே கிடைத்தது. முதல் செமஸ்டரில் மற்ற மாணவர்களைப் பார்க்க மலைப்பாய் இருந்தது. என்னை போல இரண்டு வருடம் முன் டிப்ளமா படித்தவர்களில் இருந்து, பாலிடெக்னிக்கில் டிப்ளமாவுக்கு வாத்தியாராக இருக்கும் 45 வயதுக்காரர் வரை இருந்தார்கள். சிலர் வேலையை விட்டுவிட்டு, அடுத்த மூன்றுவருடம் படிப்புக்கே முன்னுரிமை என்றும் இருந்தார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய பயமெல்லாம் முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்ததும் தெளிந்தது. சித்தூருக்கப்புறம் முதல் இடத்தில் இருந்து நழுவிப்போயிருந்தவன் இப்போது மீண்டும் அங்கு வந்தது மட்டுமல்லாமல், முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் இடையில் பத்துப் பதினைந்து மார்க் வித்தியாசமும் இருந்தது. அந்த இரண்டாம் இடம் வேறு யாருமல்ல, அழகிரிதான்.

என்னைப் பார்க்க வேண்டுமானால், வீடு, அலுவலகம், கல்லூரி, அழகிரி அறை- இந்த நான்கு இடங்கள்தான் என்று ஆகிப்போனது. உலகுவைப்போலவே, அழகிரியும் எனக்காக பேக்கரிக்கும் மெஸ்ஸுக்கும் செலவு செய்தது எத்தனை முறை என்று கணக்கில் அடங்காது. இறுதி செமஸ்டர் வெகேஷனில் மைசூர், பெங்களூர் டூர் போகலாம் என்று திட்டம் போட்டதும் , அப்போது மறுபடியும் சில பிரச்னைகளால் எவரெஸ்ட் நிறுவனம் மூடப்படும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்க, நான் தயங்கியதும், எனக்காக அழகிரியே எல்லா செலவுகளையும் செய்ததும் மறக்க முடியாதவை.

ஒரு வழியாக பி.ஈ. படிப்பு முடிவுக்கு வந்தது. எவரெஸ்ட் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டது. இன்னும் சில மாதங்கள் தாக்குப்பிடித்தால் எப்படியும் பி.ஈ.-ஐ வைத்து வேலை கிடைக்கும் என்று எப்படியோ இழுத்துப் பிடித்து ஓட்டினோம். கோவையில் வேறு வேலை கிடைப்பது அரிதாய் இருந்தது. எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை பார்த்து அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தேன். எவரெஸ்ட்டின் போட்டிக் கம்பெனிகளுக்கும் போட்டேன். பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் 'அடுத்து 5 வருடங்களுக்கு வேறு வேலைக்குப் போக மாட்டேன் என்று' ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கக் கேட்டார்கள், மாட்டேன் என்று வந்துவிட்டேன். இன்னொரு கல்லூரியில் ஒப்பந்தம் இல்லாமல் கிடைத்தது. சரி என்று போய்விட்டு ஒரு மாதம் கழித்து விலகிக் கொண்டேன். அதற்குக் காரணம் பூனாவில் ஒரு வேலை கிடைத்ததுதான். ஆனால் அந்த வேலையை ஏற்றுக் கொள்வதற்குள் ஹிந்து பேப்பர் பார்த்து அப்ளை பண்ணியிருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலைக்கு இன்டர்வியூ வந்தது. கிடைத்தும் விட்டது.

1987 ஜனவரியில் கோவையை விட்டு திருவள்ளூருக்குப் பயணமானேன்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...