சனி, ஜனவரி 24, 2004

தீவிபத்துகளின் கொடுமை

உயிர் போவதிலேயே மிகுந்த வதைபட்டு துடித்து இறப்பது தீவிபத்தாகத் தான் இருக்கமுடியும். அதிலும் ஒரே இடத்தில் பல உயிர்கள் துடித்து அடங்குவதை நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது. இன்று காலை (இந்திய நேரம்) ஸ்ரீரங்கத்தில் நடந்தது மிகப் பெரிய சோகம். மணமகன் உள்பட நெருங்கிய குடும்பங்கள் பலரை இழந்து தவிக்கும் நிலைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். விரைவாக வெளியேற சரியான வழியை அமைக்காத மண்டப நிர்வாகத்தைச் சொல்லலாம். அல்லது இடம் கொள்ளும் அளவைக் கணிக்காமல் அடைந்து கொண்ட மணவீட்டாரைச் சொல்லலாம். அவசரக் கோலத்தில் மின்சாரக் கம்பிகளை அங்கும் இங்கும் இழுக்கும் வீடியோ எடுப்பவர்களைச் சொல்லலாம். ஆனால் இழந்தது இழந்ததுதான். மீட்டு எடுக்க முடியாத இழப்பு.

சில சமயம் இந்தியாவில் உயிரின் விலை ரொமப மலிவு, சரியான பாதுகாப்பில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டிவிடுகிறோம். நம் மக்கள்தொகை, அடர்த்தி, பொருளாதார நிலை என்று எத்தனையோ இடர்ப்பாடுகள். பல ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி என்று நினைக்கிறேன், அங்கு ஒரு டூரிங் டாக்கீஸ் தீப்பிடித்து பலத்த உயிரிழப்பு. அப்போது அரசு ஒரேயடியாக டூரிங் டாக்கீஸ்களை தடைசெய்தது. கொஞ்ச நாள் முன் ஏர்வாடியில் என்று நினைக்கிறேன், மனநல விடுதி (?) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலும் பெரிய சேதம். அதிலும் ஏதோ தடாலடியாக உத்தரவெல்லாம் வந்தது என்று நினைக்கிறேன். அதுபோல இந்த துயரத்துக்குப் பின்னும் ஏதாவது வரலாம். வரவேண்டும். ஆனால் சட்டம் என்பதாக இல்லாமல், மக்களும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இயன்ற வரை கடைப்பிடிக்கவேண்டும்.

இதுவே அமெரிக்காவானால் இப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லி விட முடியாது. சென்ற வருடம் பிப்ரவரியில் இரு பெரிய விபத்துகள் நடந்தன. அதில் ஒன்றில் ஒரு இரவுவிடுதியில் 97 பேர் இறந்தார்கள். சட்டங்கள், படிப்பு, கடைப்பிடித்தல், வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தது, ஆனாலும் என்ன ஆனது? ஆகவே ஒரேயடியாக நம் நாட்டையும் குறைசொல்ல முடியாது. அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக அமையும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...