வியாழன், ஜூலை 06, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -4

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

நிர்வாகப் பணிக்கு மதி, செல்வராஜ், அன்பு செழியன் ஆகியோர் (பரி பின்னாளில் நிர்வாகத்தில் பங்கெடுத்தார்) முன்வந்தனர். பத்ரி, மீனாக்ஸ், சந்திரவதனா, மதி ஆகியோர் உறுப்பினராக ஒரு ஆலோசனைக்குழுவும் ஏற்படுத்தப்பட்டது. முதல் கட்டப்பணியாக இந்தவார நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்யும் பணி நான்கு வார சுற்றாக நால்வரிடமும் அளிக்கப்பட்டது. அவரவர்க்கு ஒரு புவியியல் களமும் வரையறுக்கப்பட்டது. இதன்மூலம் எந்த வாரத்துக்கு யார் ஏற்பாடு, அல்லது யாரிலிருந்து யார் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்துக்கு அறவே வழியின்றி செய்யப்பட்டது.

மூன்று சுற்றுக்கள் அதாவது 12 வாரங்கள் இந்த ஏற்பாடு தட்டுத்தடுமாறி நடந்தது. இது இனியும் தொடர்ந்தால் 'இந்த வார நட்சத்திரம்' என்ற வடிவத்துக்கே முழுக்குப் போட்டுவிடவேண்டியதுதான் என்னுமளவுக்கு குழு மூலமான செயல்முறை இருந்தது. ஒவ்வொருவருக்கும் பலமுறை நான் நினைவூட்ட வேண்டியிருந்ததிலிருந்து, கடைசி நிமிடத்தில் ஒப்புக்கு சப்பாணியாக ஒருவரை ஏற்பாடு செய்ததுவரை பொறுமையை நன்றாகவே சோதித்தது இந்த முயற்சி. நானே முன்வந்து நட்சத்திரத்துக்கு ஆள்பிடித்துக்கொடுத்ததும் உண்டு! வ.கே.கே/விக்கி இரண்டும் கனவில் வந்து சிரித்தன.

இப்படிச் சொல்வதால் ஆலோசனைக்குழு உறுப்பினர்களை மட்டம் தட்டுவதாய் ஆகாது. அவரவருக்கு ஆயிரம் வேலைகள், முக்கியப் பிரச்னைகள்!

இதற்குள் மதியும் மீண்டும் தான் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாய்ச் சொல்லவே, இந்த வார நட்சத்திரத்தை மதி ஒருவரே ஒருங்கிணைப்பதென்று முடிவு செய்தேன். ஒருவிதத்தில் அவர் நடத்தி வந்த 'வலைப்பூ' வாத்தியாரின் ஒன்னொரு வடிவமே இது. எனவே அவரே தொடர்வதே சரியெனப் பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும்மேல் வலைப்பதிவுகள் வந்துவிட்ட நிலையில் இனி வாரம் ஒருவர் என்று முன்னிறுத்துவது சரியாக இருக்குமா என்றும் மனதில் இன்று கேள்வி எழாமல் இல்லை.

இந்த நட்சத்திரமாகட்டும் வலைப்பூ வாத்தியாராகட்டும் நடத்துவதில் உள்ள சிரமம் நடத்தியவர்களுக்கே தெரியும். பலரும் 'இவரைப் போய் ஏன் போட்டார்கள், இன்னும் சிறப்பாக எழுதும் அவரை ஏன் போடவில்லை?' என்றெல்லாம் பேசலாம். ஆனால் உண்மையில் இந்த வாரம் நீங்கள் இருக்கத்தயாரா என்று கேட்டால் பாதிப்பேர் நான் அந்த வாரம் ரொம்ப பிசி என்பார்கள். (இன்று என்னை புனைபெயரில் தாக்கி எழுதும் வலைப்பதிவர்கூட அன்று அவருடைய இன்னொரு புனைபெயரில் தொடர்பு கொண்டபோது நேரமில்லை என்றுதான் சொல்லிவிட்டார்) சிலர் சரி என்று ஒப்புக்கொண்டுவிட்டு கடைசி நிமிடத்தில் ஜகா வாங்குவதும் நடந்திருக்கிறது. இன்னும் சிலர் சரியாக எழுதாமலும் சொதப்பியதும் உண்டு. எதையும் விமர்சிப்பது எளிது செய்வது எத்தனை கடினம் என்பது இந்த அனுபவங்களில் கிடைத்த பாடம்.

-தொடரும்

3 கருத்துகள்:

Machi சொன்னது…

//இன்னும் சிலர் சரியாக எழுதாமலும் சொதப்பியதும் உண்டு. //
சில நட்சத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன

//எதையும் விமர்சிப்பது எளிது செய்வது எத்தனை கடினம் என்பது இந்த அனுபவங்களில் கிடைத்த பாடம்//

ரொம்பச் சரி.

பாலசந்தர் கணேசன். சொன்னது…

தமிழ் மணத்தின் வெற்றிக்கான காரணங்கள் ஆராய்வது மிக எளிது.
1. தொடரபடுகிற எந்த ஒரு முயற்சியும் பயனை கொடுத்தே தீரும்.
2. மேலும் மேலும் சிறப்பான அம்சங்கள் ஒரு முயற்சியோடு இணையும் போது அது வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
Link

Kasi Arumugam சொன்னது…

குறும்பன், பாலச்சந்தர் கணேசன், நன்றி.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...